Wednesday, July 12, 2006

க. க. க. போ!!!




நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரு சரித்திர படத்தை அதுவும் ஒரு நகைச்சுவை நடிகரை கதாநாயகனாக வைத்து எடுத்து அதில் வெற்றியும் கண்டிருக்கும் இயக்குனரின் திறமைக்கும், தயாரிப்பாளர் சங்கருக்கும் (இயக்குநர்) வாழ்த்துக்கள்.

"இந்த கதையில் வரும் கதாப்பாத்திரங்கள் யாவும் பூமி, யூரேனஸ், நெப்ட்யூன்,புளுட்டோ கிரகங்களில் வாழும் யாரையும் குறிப்பிடுவன அல்ல" என்று வரும் முதல் வாசகங்களிலேயே இயக்குனரின் லொல்லு தெரிகிறது.

18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழும் குறுநில மன்னனாக வரும் வடிவேலு படத்தில் ஈரநிலம் நந்திதா, தேஜா , சோனியா மற்றும் இன்ன பிற பிகர்களுடன் "வாழ்ந்து" இருக்கிறார். வடிவேலுக்கு ஒரு மைல்கல். புலிகேசி கூர்மீசையை வேலை நேரத்தில் தூங்கும் காவலாளியின் மூக்கினுள் விட்டு தண்டிப்பதில் இருந்து கககபோ (கருதுக்களை கச்சிதமாய் கவ்விக்கொண்டாய் போ!) என்று சொல்லுவது வரை ஒரு பக்கம் அமர்க்களப்படுத்திக்கொண்டே, மறு பக்கம் உக்கிரபுத்தன் வேடத்தில் புரட்சி வீரனாய் வந்து சீரியஸாக வசனம் பேசி வெளுத்து வாங்குகிறார்.


பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருக்கிறது. நாசர் ராஜகுருவாக வெகு நேர்த்தியாக வந்து மனதில் நிற்கிறார்.

பல முறை கருப்பு வெள்ளையில் பார்த்து சலித்த கதை தான் என்றாலும், அதை இன்றைய சூழலுக்கு ஏற்ப பல கருத்துக்களுடன் சொல்லியிருப்பதும், நக்கல், நையாண்டி நிறைந்த வசனங்களும், வெளிப்புற படப்பிடிப்புக்கான இடங்களுக்கு மெனக்கெட்டிருப்பதிலும் இயக்குனரின் உழைப்புத் தெரிகிறது. பெப்சி, கோகோ கோலாவை கப்சி, அக்கா மாலா என்றும், சச்சினை சச்சிதானந்தம் என்றும் உருவகப்படுத்தி நிகழ்காலங்களை ஒட்டி கருத்து சொல்லி இயக்குநர் சங்கரின் மாணவன் என்பதை நினைவூட்டுகிறார் சிம்புதேவன். தமிழ் சினிமாவுக்கு இன்னொரு சத்தான இயக்குநர்.

கட்டபொம்மன் - ஜாக்சன் துரை காட்சி போன்று அமைக்கப்பட்டிருக்கும் காட்சியில் அதே பழைய வசனத்தைப் பேசாமலும், சிவாஜியை நினைவுப்படுத்தாமலும் தனித்துவமாக எடுக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.


இசை, கலை யாவும் அருமை. நகைச்சுவையுடன் கருத்துக்களையும் அள்ளி இறைத்து (இறுதியில் சொல்லப்படும் 10 கட்டளைகள்) கககபோ!!! (கருத்துக்களைக் கச்சிதமாய் கவ்விக் கொண்டு போங்கள்) என்றிருக்கிறார் இயக்குநர்.

மசாலா அனலடிக்கும் படங்களினால் பாதிக்கப்பட்டவர்களும், சரித்திரப் படங்கள் எடுக்க முயற்சிப்பவர்களும்/எடுத்து பாதியில் தொடராமல் இருப்பவர்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home